அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், தமிழக ஜவுளித் துறையினருக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, வெளி மாநிலங்களுக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது என ஜவுளித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வேட்டி–சேலை வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்த திட்டம் வரவேற்பைப் பெற்றதால், அதைத் தொடர்ந்து வந்த அரசுகளும் இலவச வேட்டி–சேலை திட்டத்தை கடைபிடித்து வருகின்றன.அதிமுக, திமுக அரசுகளால் இலவச வேட்டி–சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தாலும், தவெக அரசு அமைந்ததும் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வழக்கமாக வழங்கப்படும் நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு, தந்த நிறங்களுடன், இந்த ஆண்டு பிரகாசமான பச்சை உள்ளிட்ட 15 வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. 5.5 மீட்டர் நீளம், 45 அங்குல அகலத்தில் தயாரிக்கப்படும் சேலைகளில் 60 கவுண்ட் பாலிகாட்டன் நூல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டர்கள் இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, வேட்டியின் நீளம் 3.75 மீட்டரில் இருந்து 2 மீட்டராக குறைக்கப்பட்டு, அகலம் 50 அங்குலத்தில் இருந்து 52 அங்குலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 65:35 என்ற விகிதத்தில் பாலியஸ்டர்–காட்டன் நூல் பயன்படுத்தப்பட்டு, வேட்டிகள் சலவை செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.
மேலும், இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான நூல் கொள்முதல், நெசவுப்பணி, பதப்படுத்துதல், சாயமேற்றுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஜவுளித் தொழில் சார்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜவுளித்துறையினர் கூறியதாவது: தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி பல்வேறு வடிவங்களில் வெளிமாநிலங்களுக்கு சென்றது. தற்போது இந்த மடைமாற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேட்டி நெசவுக்கு 82.5 சதவீத பாலியஸ்டர் நூல் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் இது 65 சதவீதமாகவும், சேலைக்கு 50 சதவீதமாக இருந்த பாலியஸ்டர் 45 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கு தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் 7,000 டன் நூலானது, கடந்த காலங்களில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தவெக அரசு பாலியஸ்டர் அளவைக் குறைத்ததால், கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் நூல் கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி, தமிழக நூற்பாலைகளுக்கே சென்று சேருகிறது.
கடந்த ஆண்டுகளைப்போல இல்லாமல், இந்த ஆண்டு முழுமையாக ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி–சேலை உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், தரமான வேட்டி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சலவை செய்து வழங்கும் புதிய முறையை தற்போதைய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கென ரூ. 32 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் அரசு சாய பதனிடும் ஆலை மற்றும் தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை மடிக்கும் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர், பேக்கிங் பணியாளர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோருக்கு 4 மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சேலையில் ஜரிகை பார்டர் சேர்க்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் ஜரிகை உற்பத்தி செய்பவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
பொதுமக்களுக்கு தரமான வேட்டி, சேலை வழங்க வேண்டும், ஜவுளித் தொழில் பொருளாதாரம் மேம்படுவதோடு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வரி வருவாய் தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஜவுளித் தொழிலை விட்டு வெளியேறியவர்களும் இப்பணிக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலவச வேட்டி–சேலை உற்பத்தி
மொத்த உற்பத்தி – 1.77 கோடி வேட்டி/சேலை
அரசு ஒதுக்கியுள்ள தொகை – ரூ.642 கோடி
விடுவிக்கப்பட்ட தொகை – ரூ.300 கோடி
நூல் கொள்முதல்
மொத்த தேவை – 12,500 மெ. டன்
மொத்த நிதி ஒதுக்கீடு – ரூ.277 கோடி
கூட்டுறவு அரசு நூற்பாலை – ரூ.116.16 கோடி
தனியார் கொள்முதல் – ரூ.161 கோடி
சைசிங் பணி
ஒதுக்கப்பட்ட தொகை – ரூ.21 கோடி
நெசவுப்பணி
நெசவாளர்களுக்கு கூலி – ரூ.118 கோடி (தோராயமாக)
சலவைப்பணி
ஒதுக்கப்படும் தொகை – ரூ.32 கோடி.
இலவச வேட்டி/ சேலை உற்பத்தி
சரகம் – வேட்டி/சேலை (தறிகளின் எண்ணிக்கை)
ஈரோடு – 6394/13,550
திருச்செங்கோடு – 5372/ 10,167
கோவை – 420/1450
திருப்பூர் – 267/354
மொத்தம் – 12,453 /25,521